புதன், 5 ஆகஸ்ட், 2015

மழலைஸ் (1)

குழந்தைகள் இலக்கியத்தில் எழுதிப் பழக்கம் இல்லாவிட்டாலும், அவ்வப்போது ஃபேஸ்புக்கில் சர்வேஷ் (மாப்ளை) அதர்வன் (மகன்) பற்றி எழுதிய பதிவுகளைத் தொகுக்கலாம் என்று யோசித்தேன். அது இதோ 
-----------------------------------------------------------------------  
நம் வீட்டில் உயிருடன் ஒரு ஜந்து அரையடி யில் தன் வாழ்வை ஆரம்பித்து, நம்மைப் பார்த்துச் சிரித்து, நம்மைப் பார்த்துக் கற்று, நாம் செய்வதையே செய்து, நம்முடன் சேர்ந்து வாழ்ந்து வார்த்தை வார்த்தையாய்ப் பழகி மில்லி மீட்டர் மில்லி மீட்டராக வளர்வதைக் காணுவது பேரானந்தம். 

நாம் நம் வாழ்நாள் முழுதும் அக்கம் பக்கம், தெருக்குழந்தைகள், சினிமாக்கள், தெரிந்தவர் குழந்தைகள் என எத்தனையோ குழந்தைகளைக் கடந்து வந்திருந்தாலும் நம் வீட்டில் நம்முடனே 24 மணி நேரமும் ஒட்டி வளரும் ஒன்றைக் கவனிப்பது ஒருபெரும் பிரமிப்பு. 

மாப்பிளை சர்வேஷிடம் துவங்கிய அந்தப் பிரமிப்பு மகன் அதர்வனிடம் வந்து நிற்கிறது. அழுகை, ஆய், உச்சா, வாந்தி, மயக்கம், தூக்கம், முதல் தவழல், முதல் வார்த்தை, முதல் சிணுங்கல், முதல் சிரிப்பு, முதல் காயம், முதல் ஹேர்கட், ராத்திரி விழிப்புகள், தோளில் அழுகை, பிஞ்சு விரலின் நகம், பால் பாட்டில், போலியோ மருந்து, டயப்பர் பேரம், குட்டி ஜட்டி, கோவண வரிசை, அம்மை ஊசி, ஸ்பெஷல் தடுப்பூசி, பொம்மைகளுடனான உலகம், சின்ன வளையல், கொலுசுச் சத்தம், சத்துக் கஞ்சி, பசும் பால், எருமைப்பால், ஹனி நிப்பிள், இருமல் டானிக், ஜூர மருந்து, காமிக்ஸ் கதைகள், சைஸ் மாறும் செருப்புகள், பொம்மை ஓடும் விளம்பரங்கள், குட்டி சைக்கிள், மினி கார், பக்கத்து வீட்டுக் குழந்தை நட்பு, பூச்சி அடித்தல், கன்றுக் குட்டி தொடுதல், பறவை பார்த்தல் என விரியும் கொடுத்து வைத்த அந்த உலகத்தை அடைந்த பாக்கியசாலிகளுக்கு வாழ்த்துக்கள்.
-----------------------------------------------------------------------  
நானும் அதர்வனும் இன்றைக்கு பால்கனியில் (L வடிவம்) ஓளிந்து விளையாடிக் கொண்டிருந்தோம். நான் L வளைவில் திரும்பும் இடத்தில் ஒளிந்து கொள்ள வேண்டியது. அவன் ஒரு பக்கம் பூரா ஓடி, திரும்ப வந்து என்னை கண்டுபிடிக்க வேண்டியது. இதான் ஆட்டம். சுமார் 20 நிமிடம் மூச்சிரைக்க இரைக்க ஓடிக்கொண்டிருந்தான், ஒவ்வொரு முறையும் என்னைக் கண்டுபிடித்துக்கொண்டேடேடேடேடேடேடேடே இருந்தான்.
நானும் ஒவ்வொரு முறையும் வேறு வேறு மாதிரி அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
ஒரு முறை காத்திருந்து எழுந்து பயமுறுத்துவது. ஒரு முறை சட் - டென்று எழுந்து நேரெதிரே ஓடி வருவது. ஒரு முறை அவன் ஓடித் திரும்பி வருமுன் வழியில் உள்ள கதவுக்குள் நுழைந்து கொண்டு அவன் பின்னாலேயே திரும்பி வந்து அவன் என்னைத் தேடுகையில் அவன் பின் நின்று நானும் என்னைத் தேடுவது என்று விளையாடிக் கொண்டிருந்தோம். ஒவ்வொன்றுக்கும் ஒரு மாதிரி உடலை வளைத்து நெளித்து விழுந்து சிரிப்பான். விழுமுன் பிடித்துக் கொள்ள வேண்டும்.
ஆட்ட சுவாரசியத்தில் இப்போது ஓடி வந்து என்னைப் பார்த்தவன் என் பின்னால் வந்து அவனும் ஒளிந்து கொண்டான். "ரெண்டு பேரும் ஒளிஞ்சுகிட்டா யாருடா கண்டுபிடிக்கிறது?" என்று இருவரும் விழுந்து புரண்டு சிரித்துக் கொண்டிருக்கிறோம்.
அதர்வன் - 21 மாதங்கள் - ஒண்ணேமுக்கால் வயது
-----------------------------------------------------------------------  

மழலைஸ் (2) 

-----------------------------------------------------------------------  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக