சனி, 28 மார்ச், 2015

"லிங்கா" பாடலொன்றை முன்வைத்து "ராஜா - ரஹ்மான்"

லிங்கா திரைப்படம் வெளிவந்த போது இணைய வெளியில் எங்கும் அது பற்றிய பேச்சுக்கள் தான். டைப்படிக்கத் தெரிந்த ஒவ்வொருவரும் படத்தை டவுசர் வேறு நாடா வேறாக கிழித்துத் தொங்கப் போட்டார்கள். அந்த ஷாட்ல கேமரா ஆங்கிள் சரியில்லை, இந்த இடத்துல மியூசிக் ரொம்ப அதிகம் என்று வகை பிரித்து தரம் பார்க்கத் தெளிந்து விட்டான் ஃபேஸ்புக் தமிழன்.




பதிலுக்கு கே.எஸ்.ரவிக்குமாரும் ஒரு இணைய தளத்திற்குத் தந்த பேட்டியில் கொஞ்சம் கோபமாக "டிரெயின் ஃபைட் வச்சா, அது அந்தப் படத்துல வருது, பஸ் ஃபைட் வச்சா, இது இந்தப் படத்துல வருது-ங்கறீங்க, இல்லாட்டி ஹாலிவுட் படத்தை கம்பேர் பண்ணி, இது அந்த அளவுக்கு இல்லைப்பாங்குறீங்க, அவன் ஆயிரம் கோடியில படம் எடுக்குறான், என்கிட்டயும் ஆயிரம் கோடி குடு, எடுத்துக் காமிக்கிறேன். மாஸ் ஹீரோ படத்துக்கு ஆயிரம் ஷாட் வைக்குற கஷ்டம் எங்களுக்குத் தான் தெரியும்,

கிளைமாக்ஸ் பலூன் ஃபைட் ஒரு மாதிரி இருக்குங்கிறீங்க, பிடிக்கலைன்னா பாக்காத, அது ஒரு அஸிஸ்டெண்ட் டைரக்டர் சொன்ன ஐடியா, அது ரசிகர்களுக்கு, பலூன் ஏறுறதுக்கு முன்னாடியே படம் முடிஞ்சிடுச்சி, எழுந்திருச்சிப் போ, பிடிச்சவன் கடைசி வரைக்கும் பாரு" என்று குமுறு, குமுறு என்று குமுறியிருந்தார்.

ஒரு பதிவில் நண்பர் ஒருவரது லிங்கா படத்தின் இன்ட்ரோ பாடலைப் பற்றி ஒரு விமர்சனம் இருந்தது இப்படி....
"வானம் வலது பையில் பூமி இடது பையில் வாழ்வே நமதுப் பையில்" என்ற வரி பாடகரால் அழுந்தப் பாடப்பட்டு "நம் மதுப் பையில்" என்பது போன்று ஒலிப்பதாகக் குறிப்பிட்டு அதை அலசியிருந்தார் அவர். என்ன பாடுறாங்க இவங்க? அர்த்தமே மாறிப் போச்சே என்று துவங்கி அவருக்குக் கிடைத்த கமெண்டுகளில் இதற்கு இசையமைப்பாளர் தான் காரணம், ஒலிப்பதிவின் போது கவிஞர் கூட இல்லையா? என்றெல்லாம் பல தரப் பட்ட கமெண்டுகள்.

இதில் உள்ளே புகுந்த ஒருவர் "வழக்கம் போல்" ராஜா - ரஹ்மான் சண்டைக்கான விதையை தூவி விட்டார். இளையராஜா இசையமைப்பில் இப்படி நேராது. வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் அவர் என அவர் கொளுத்திப் போட, "இசைஞானியும் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால் , அவரும் அதைப் புரிந்து வித்தியாசம் காண்பிக்க சொல்லியிருப்பார்...!!" என்றெல்லாம் கருத்துகள் வர, இருபக்கமும் கருத்துச் சண்டைகள் வார்த்தைக் குவியல்கள் சேர.....

அதில் நடந்த விவாதத்தில் எனது கருத்துகள் கீழே...

படையப்பா வந்தபோது விடியற்காலையில் ஒரு டீக்கடையில் (அங்கே எந்த புதுப்படம் வந்தாலும், அன்றே கேசட் வாங்கி அலற விடுவார்கள்) நின்று பாடல் கேட்கப் போனேன். பெருத்த ஏமாற்றம். "சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறுஊஊஊஊஊஊஊஊஊ" என்ற இழுத்ததைக் கேட்டால் எங்கோ கேட்ட, யாரோ ஒரு சாதாரண இசையமைப்பாளர் போட்ட டியூன் போல இருந்தது. (பின்னாளில் அதுவும் ரஜினி, ரஹ்மான் என்ற காம்போவால் ஹிட்டானது வேறு விஷயம்). ஆனால் முதல் முறை கேட்ட போது எனக்கு அதிர்ச்சி. அதுவும் முத்து போன்ற பட்டாஸ் பாடல்களை கொடுத்த ரஹ்மான் இப்படி மிக மிகச் சாதாரணமாக இசையமைத்திருக்கிறாரே என்று வருத்தம். ரஹ்மான் ஸ்டைல் அதில் இல்லவே இல்லை. டண்டணக்கு டண்டணக்கு என்று "தப்பு" இசையெல்லாம் இருந்தது. ஆனாலும் திருப்தி இல்லை.

சில நாட்கள் கழித்து எங்க ஏரியாவில் இசை ரசிகரான ஒரு அண்ணன் சொல்லிக் கொண்டிருந்தார். கே.எஸ்.ரவிக்குமாரும் சரி, ரஜினியும் சரி பசிக்கு சாப்பிடற கேசுங்க, ரசிச்சுச் சாப்பிடறவங்க இல்லை. அவங்களுக்குத் தேவை ரஹ்மான் இசை, ஆனால் ரஹ்மானின் தனித் தன்மை உள்ள இசை அல்ல. நைட்டு வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு வந்த பையனுக்கு அவசர அவசரமா கெடச்ச பொருளை வச்சு உப்மா செஞ்சு போடுவாளே அம்மா.... அந்த மாதிரி, பசி அடங்குனா போதும்னு ருசி பாக்காம சாப்பிடுற மாதிரி கே.எஸ், ரஜினி படம்லாம் ரஹ்மானுக்கு. இவங்க படுத்துற அவசரத்துக்கு ரஹ்மான் என்ன பண்ணுவார்? ஆனா, அதே தாயார், ஒரு விசேஷ நாள் அன்னிக்கு நல்லா நேரம் எடுத்து கவனம் எடுத்து, அடை அவியல், வடை, பாயசத்தோட விருந்து செஞ்சா எப்படி இருக்கும்? அதுக்கு அவளுக்கு நேரம் கொடுக்கணும். மணிரத்னமும், ஷங்கரும் நல்லா நேரம் கொடுக்குறாங்க. தனக்குத் தேவையானதை கேட்டு வாங்கறாங்க. அதான் அவங்க படத்தில் ரஹ்மான் இசை அவ்ளோ ஹிட்டாகுது என்றார்.

அப்படித்தான் லிங்காவும்.

உண்மைதான். ரஜினிக்காக ரஹ்மான் இசையமைத்த படையப்பா, பாபா, சிவாஜி, எந்திரன், கோச்சடையான், லிங்கா, எல்லாவற்றையும் கவனித்தால் லிஸ்டில் பெஸ்ட் சிவாஜியும், எந்திரனுமே. முத்து இதில் சேராது. அது முதல் காம்போ. எதிர்பாராமல் அமைந்த மரண மாஸ் ஹிட். கோச்சடையான் ஓக்கே லெவல், படையப்பா சுமார், பாபா கொடுமை. காரணம் அதன் டைரக்டர். ஒரு ஃபைவ் ஸ்டார் ஹோட்டலின் செஃப் சாதாரண உணவையும் செய்வான், அட்டகாசமான உலகப் புகழ் உணவுகளையும் செய்வான். நாம் எதைக் கேட்டு வாங்குகிறோம் என்பதைப் பொறுத்து அதன் தரம் மாறுகிறது.

மணிரத்னத்தின் "மணிரத்னம் படைப்புகள் - ஓர் உரையாடல்" புத்தகத்தில் மணி சொல்லியிருப்பார். (என் வார்த்தைகளில் சொல்கிறேன்) இளையராஜா ஒரு ஜீனியஸ், இசை கோர்க்காத டிராஃப்டாக முதல் முறை படத்தை ஃபர்ஸ்ட் காப்பியாக படத்தை பார்க்கும் போதே அதற்கு என்ன இசை கோர்க்கலாம் என்று அவரது மனதுக்குள் ஓட ஆரம்பித்து விடும். கடகடவென நோட்ஸ் எழுத ஆரம்பித்து விடுவார். கூடவே அமர்ந்து எந்த இடத்தில் எந்த மாதிரி இசை தேவை என்று நாம் சொல்லிவிட வேண்டும். நமக்குத் தேவையானதை கேட்டு வாங்கிக் கொள்ள வேண்டும். விட்டால் போச்சு. நோட்ஸை முடித்து டீமிடம் கொடுத்துவிட்டுக் கிளம்பி விடுவார். இளையராஜா என்ற பிம்பத்தின் மீது உள்ள பெருமையாலும் பயத்தாலும் ஒதுங்கி நின்றால் நீங்கள் எதிர்பார்த்த இசை கிடைக்காது. அதனால் தான் "இளையராஜா"வே இசையமைத்திருந்தாலும் சில படங்களின் பாடல்கள் படு மொக்கையாக இருக்கும்.
same thing is applicable in the choice of words

இதற்கு இசையமைப்பாளர் மட்டுமல்ல, டைரக்டர், கவிஞர், பாடகர், பாடல் பதிவன்று அனைவரும் ஓரிடத்தில் இருக்கும் படி ஒருங்கிணைப்பவர் அனைவருமே பொறுப்பு.

"மும்பையில் உள்ள தானேவில் உள்ள ஒரு சிறு ஊர் Bhivandi". இதை நான் "மும்பையில் உள்ள தானேவில் உள்ள ஒரு சிறு ஊர் பீவண்டி" என்று எழுதினால் தமிழில் எவ்வளவு அருவருப்பான ஒரு வார்த்தையாக மாறி விடுகிறது? ஆனால் என்னால் அவசரத்தில் இதை கவனிக்க முடியாது. தொடர்ந்து ஒரு வேலையில் கவனம் செலுத்தும் போது கவனக்குறைவாக விட்டுவிடுவோம். அதை வேறொருவரோ, அல்லது கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து விட்டு நாமே சிறிது நேரம் கழித்து கவனிக்கும் போது தான் கண்டுபிடிக்க முடியும். அதற்குள் அந்தப் பாட்டு ரெக்கார்டு ஆகி விட்டிருந்தால்? போச்சு. புரடியூசர் என்ன சொல்வார்? நேரமில்ல, இன்னோரு முறை ரெக்கார்டிங்க வச்சா டபுள் செலவாகும். விட்ருங்க. போனாப்போகுது என்பாரே.

அனால் பழி, இசையமைப்பாளர் தலையில் மற்றும் கூடவே கவிஞனின் தலையிலும்.

பாடகர் டி.எல்.மகாராஜன் ஒருமுறை சொன்னார். நாங்க பாடி முடிச்சதும், குறில், நெடில் பிரச்சினை, வார்த்தை மாற்றம் மாதிரி ஒலிச்சா பிரச்சினை வந்தா படக்குழுவினரின் விருப்பத்திற்கேற்ப மறுபடி வந்து பாடிக் கொடுப்போம். மறுபடி காசெல்லாம் வாங்க மாட்டோம். ஆனால் இன்னைக்கு அப்படி இல்ல என்று உதாரணமாக உதித் நாராயணின் இரண்டு பாடல்களை (காதல் பிசாசே-வில் பர்ர்ருவாயில்லை, உன்னி உன்னி கிட்ட குப்ப கொட்ட) சொல்லி, கரெக்ஷன் இருக்கு திரும்ப வந்து பாடிக் கொடுங்க என்று கேட்டதற்கு "கண்டிப்பா வர்றேன், இன்னொரு பேமேண்ட் போட்ருங்க, கூடவே எக்ஸிகியூட்டிவ் கிளாஸ் பிளைட் டிக்கெட்டும்" என்றாராம். அந்த செலவுக்கு "பர்ர்ருவாயில்லை"யே பரவாயில்லை என்று விட்டு விட்டார்களாம். எப்படி இருக்கு?

புதிய முகம் படத்தில் வைரமுத்து இந்த பாடலை

"நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் ஏதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா
"இளமை பொங்கி விட்டதா
இதயம் சிந்தி விட்டதா"
சொல் மனமே.."

"இதயம் பொங்கி விட்டதா, இளமை சிந்தி விட்டதா" என்றுதான் முதலில் எழுதியிருந்ததாகவும், அது ரெக்கார்டிங் ஆன பிறகு கேட்டுவிட்டு ஆட்டோவில் வீட்டுக்கு கிளம்பி விட்டதாகவும் பிறகு மீண்டும் அந்த வெர்ஷனை கேட்ட போது "இளமை சிந்தி விட்டதா" என்ற வரிக்கு கொஞ்சம் ஆபாசமான அர்த்தம் வருவது போல தொனித்ததால் உடனே ஓடிப்போய் இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் அனைவரையும் விளக்கிச் சொல்லி புரியவைத்து அந்த இரு வரிகளையும் வார்த்தை மாற்றி மீண்டும் பாட வைத்து சேர்த்ததாக ஒரு புத்தகத்தில் சொல்லி இருந்தார். இதற்கு கவிஞன் மட்டுமல்ல, இசையமைப்பாளர் மட்டுமல்ல சூழ்நிலையும் காரணம்.

தன் முதல் படத்திலேயே ரஹ்மான் தொட்ட உயரமும், அதற்கு முன் முடிசூடா "ராஜா"வாக ராஜா இருந்ததும் தவிர்க்க இயலாமல், ரசிகர்களை ரஹ்மான் பற்றிப் பேசும் போது உடனே இளையராஜாவை கம்பேர் செய்ய வைக்கிறது. vice versa வாக ராஜா என்றதும் ரஹ்மானை பலர் கம்பேர் செய்வதும் பரவலாக நடக்கிறது. இவனை குறை சொல்லியாகணுமே, அப்போ கம்பேர் செய்ய இவனை விட பெட்டர் யாரு? வேற யாரு? இளையராஜாதான். ஸோ, எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது. ரஹ்மானும், இளையராஜாவும் (வெவ்வேறு விதத்திலாவது) பெஸ்ட் என்று.

முதலில் இருவரும் வேறு வேறு கால கட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களை கம்பேர் செய்வதே தவறு. இருவர் காலகட்டத்திலும் வேலையில்லா திண்டாட்டம், சினிமா தியேட்டர்களின் நிலை, படங்களின் எண்ணிக்கை, தமிழின் தேவை, ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் சுவடுகள், பிற்பாடு உலகப் படங்களின் போட்டி, உலக இசைகளின் அவதானிப்பு, சினிமாவின் பிஸினஸ், இசையின் தேவை, பாடல்கள் குறைவு, தமிழ் (யோவ், அதான் இளையராஜா பாட்ல வந்துடுச்சுல்ல, அப்போ அந்த வரிகளையும் வார்த்தைகளையும் யூஸ் பண்ண முடியாதுல்ல, வேற தானே எழுதியாகணும்?) இளையராஜாவின் அடுத்த தலைமுறையிடம் அவரது பாதிப்பு என மிகவும் வேறுபட்ட விஷயங்கள் நிறையவே உண்டு.

"ஆடுகளம்" படத்தில் கோப, சோகத்தோடு தண்ணியடிக்கும் பேட்டைக்காரனிடம் அவர் பால்ய நண்பர் சொல்வார். "நம்ம குரு கிட்ட இருந்து நம்ம பிரிஞ்சு வந்தப்போ, நம்ம செட்டு பயகள்-லாம் நம்ம கூட வந்தான். அவனுங்களுக்கு நீ மாதிரி, இந்த தலைமுறை எளந்தாரிங்களுக்கு கருப்பு" என்பார். (ஆனால் பேட்டைக்காரனின் மனம் ஒப்பாமல் தன் வாரிசாகக் கருத வேண்டியவனை தன்னுடன் ஒப்பிட்டு எதிரியாக நினைத்து நெகடிவ்-ஆக படம் நகரும்)

அப்படி இளையராஜாவும், ரஹ்மானும் பேட்டைக்காரன், கருப்பு மாதிரி இரு வேறு தலைமுறைகளாக கருதப்பட்டு கொண்டாடப் பட வேண்டியவர்கள். அவர்களை ஒப்பிடுவதே தவறு என்பது என் கருத்து.

"இசைஞானியும் வார்த்தைகளுக்கும் உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால் , அவரும் அதைப் புரிந்து வித்தியாசம் காண்பிக்க சொல்லியிருப்பார்...!!" என்றெல்லாம் ("சொல்லியிருப்பார்" என்று benefit of doubt அடிப்படையில் அந்த வாக்கியமும் இருக்கிறது) கமெண்டு போட்டு அது ஒரு கோபக்கார ரஹ்மான் வெறியனின் கண்ணில் பட்டால் நான் போட்ட மாதிரி விளக்கம் லாம் போட மாட்டான். அவன் கண்ணில் இளையராஜாவின் குறையெல்லாம் படும். எகிற ஆரம்பிப்பான். இவ்வளவு பேசுகிற நீங்கள் தானே ஒன்றுமே புரியாத why this kola veri di யை பேய் ஹிட் ஆக்கினீர்கள்?


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக