புதன், 30 ஜூன், 2010

தடியெடுத்தவன் எல்லாம் தாணாக்காரன்

யார் என்று கேட்கிறீர்களா? தாணாக்காரன் என்று அக்காலத்திலும், தற்போது செல்லமாக மாமா என்றும் அழைக்கப்படும் போலீஸ்காரர்கள்தான் அவர்கள். சமீபத்தில் நண்பர் ஒருவருடன் டூ வீலரில் போகும்போது ரேஷ் டிரைவிங், ஓவர் ஸ்பீடு என்று போலீஸ் பிடித்தது. ஆனால் சாதாரண காக்கி யூனிபார்ஃம். இதில் சிவில், கிரிமினல் மற்றும் டிராஃபிக் போலீஸ் என்ற பிரிவுகள் வேறு. அது மட்டுமில்லை. யார் எந்த டூட்டி பார்க்கிறார்கள் என்று சாதாரண குடிமகனுக்குக் குழப்பமாக இருக்கிறது.

அய்யா லைசென்ஸ் இருக்கா என்றால் காமிக்கலாம். ஆர்.சி இருக்கிறதா என்றால் நிரூபிக்கலாம். ரேஷ் டிரைவிங், ஓவர் ஸ்பீடு என்று சொன்னால் ஒரு சாதாரண குடிமகன் எப்படி அய்யா பொய்யென்று நிரூபிப்பான்? ரெண்டு நாள் ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அலைவதை விட காசைக் கொடுத்துத் தொலையலாமே என்று தான் தோன்றியிருக்கிறது நண்பருக்கு. அதையும் ரகசியமாகக் கேட்டிருக்கிறார். இது வழக்கம்தான். ஆனால் என்னவோ தெரியவில்லை. நம்ம போலீஸ் அய்யாவுக்கு கடமை உணர்ச்சி தடுத்து விட்டது. வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

என்னடாவென்று பார்த்தால் மெள்ளக் குனிந்தபடி "இன்ஸ்பெக்டர் இருக்காருப்பா. அதான் வேற வழியில்லாம கேஸ் பிடிக்கிறோம். எழுதியாச்சு. கம்முன்னு போயிடுங்க. நாளைக்குக் கோர்ட்டுக்கு வந்து ஃபைன் கட்டி லைசென்ஸை திருப்பி வாங்கிக்கோங்க" என்றபடி வாங்கி உள்ளே போட்டுவிட்டார். முடிந்தது கதை. (நல்லவேளை. இன்று வரை என்னிடம் லைசென்ஸூம் இல்லை. வண்டியும் இல்லை. ஓட்டவும் தெரியாது. இருந்தாலும் கற்றுக்கொள்ளும் ஐடியா இல்லை. எங்க மாமாவோட பாலிஸிதான். மனுஷன் அறுவது வயசாகப்போவுது. இன்னமும் சைக்கிள் கூட ஓட்ட மாட்டேங்கிறார்.)

லைசென்ஸை வாங்க பத்து நாட்கள் அலைந்தும் முடியவில்லை. கோர்ட்டுக்குப் போனால் போலீஸ் ஸ்டேஷன் போ என்று பதில். ஸ்டேஷனுக்குப் போனால் அங்கேயிருக்கும் பொம்பளை போலீஸ்காரம்மா ஜெராக்ஸ் எடுத்து வரச் சொல்கிறார். ஒரு குயர் ரூல்டு பேப்பர், டீ, காபி, வடை வகையறாக்கள் சப்ளை தனி. என்ன செய்வது? இதையெல்லாம் பொறுத்துக்கொண்டு போக சாதாரண குடிமகனுக்கு பொறுமை இருக்க வேண்டும். பொறுமை கடலினும் பெரிது (எருமை அதனினும் பெரிதாமே).

லேசாக முகம் சுளித்தாலே போதும். தினமும் ஸ்டேஷனுக்கு வந்தாக வேண்டும். வரவழைக்கப்பட்டு நம் மனஉறுதியை அடித்து நொறுக்குகிறார்கள். கிட்டத்தட்ட ‘அஞ்சாதே’ படத்தில் போலீஸான நரேனுக்கு நேரும் சில அனுபவங்கள் சாதாரணனான நம்மை எதிர்கொள்கின்றன. மூன்று நாட்கள் ஒரு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பாருங்களேன். அங்கு நடக்கும் சம்பவங்கள், அலட்சியங்கள், பிரச்சினைகள் உங்களை பதப்படுத்தி விடும்.

சென்னையில் பணிபுரிந்தபோது இரு வருடங்களுக்கு முன் இதேபோல் ஒரு சம்பவம். -------வாக்கம் என்ற ஒரு ஏரியா போலீஸ் ஸ்டேஷன். சாதாரண பாஸ்போர்ட் அட்ரஸ் வெரிஃபிகேஷனுக்கு வீட்டுக்கு வந்த போலீஸ்காரர்கள் வீட்டில் ஆள் இல்லாததால் ஆளைப் பார்க்க வேண்டும், ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க என்று சொல்லிப்போய்விட்டார்கள். பாஸ்போர்ட் விஷயம் ஒரு மணி நேரத்தில் முடித்து விடலாம் என்று ஸ்டேஷனுக்குப் போனால் ஸ்டேஷனில் மூன்று முழு நாட்கள். இரவு முழுக்க ஆபீஸ், பகல் முழுக்க இங்கே, மறுபடி இரவு ஆபீஸ், மீண்டும் பகல் முழுக்க இங்கே என்று போனது பொழுது.

மூன்றாவது நாள்தான் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) கண்ணிலேயே பட்டார். ஆனால் அதற்குள் ஸ்டேஷனில் நடந்த விஷயங்கள், வெட்டு, குத்து கேஸுகள், பஞ்சாயத்துகளை எல்லாம் பார்த்து மனதில் இருந்த கொஞ்ச நஞ்ச தைரியமும் போய்விட்டது. ஓரமாய் மர பெஞ்சில் உட்கார வைத்து வருகிற போகிற எல்லா போலீஸாரும் என்னய்யா என்ன விஷயம் என்று கேட்டால் எழுந்து எழுந்து பதில் சொல்லி, தேவையே இல்லாமல் அவர்கள் முறைப்பை எல்லாம் வாங்கிக்கொண்டு..... மூன்றாவது நாள்தான் அந்தப் பேப்பரக் கொண்டாய்யா என்று கையெழுத்துப் போட்டார் ஆய்வாளர்.

அப்படியும் அவரது அடிப்பொடிகள் இருநூறு ரூபாய் பிடரியைச் சொரிந்தபடி வாங்கி விட்டுத்தான் விட்டார்கள். மூன்று நாள் பழக்கத்தில் ஏட்டைய்யா (அப்படித்தான் கூப்பிட வேண்டுமாம்) விடம் கேட்டால், என்ன தம்பி பண்றது? ஒரு ஸ்டேஷன் நடத்த (?) மாசத்துக்கு குறைஞ்சது பத்தாயிரத்துல இருந்து இருவதாயிரம் ரூபாயாவது செலவாகுது. அதுக்கு எங்க போறது? இப்படி எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் வசூல் பண்ணிக்கறது தான், என்று நியாயப்படுத்துகிறார் அந்த அப்பாவி (?) போலீஸ்மேன்.

மதுரையிலோ எங்கோ இருந்தபடியே தன் துறை பற்றியெல்லாம் ப்ளாக் எழுதுகிறாரே ஒரு போலீஸ் அண்ணாச்சி, நல்ல மனுசன் பாவம். அவர் இதைப் படித்தால் கொஞ்சம் கண்டுகொள்ளச் சொல்லுங்கள், அட்லீஸ்ட் கருத்தாவது சொல்லச் சொல்லுங்களேன். கம்ப்யூட்டர், லேப்டாப் என்றால் என்னவென்று கூட இவர்களுக்குத் தெரியவில்லை. தப்பாய்ச் சொல்லவில்லை. அவர்களின் ஆபீஸ் அட்மாஸ்பியரில்(?) அதையெல்லாம் கற்றுக்கொள்ளும் நேரம் அவர்களுக்கில்லை.

சமீபத்தில் வழக்கம் போல் பழைய புத்தகக் கடையில் நோண்டும்போது பலான செக்ஸ் டாக்டர் பிரகாஷ் எழுதிய ஒரு புத்தகம் கிடைத்தது. (பலான புத்தகம் அல்ல). சிறையென்னும் போதி மரத்தடியில் தான் பெற்ற பாடங்களையும், கூட இருப்பவர்களின் கதைகளையும் எழுதியிருக்கிறார் இந்த நவீன புத்தன் ஆகிய பெண் பித்தன். கிட்டத்தட்ட இருபது விதமான கதைகள். ஆனால் ஒவ்வொன்றும் நாம் தினசரி நியூஸ் பேப்பர்களில் படித்த முக்கிய கேஸ்களின் அதிர்ச்சியூட்டும் மறுபக்கங்களின் விஷயங்கள்.

நாம் பேப்பரில் அந்தக் கேஸ்கள் பற்றிப் படிப்பவை எல்லாம் புனையப்பட்ட கதைகள். பிரகாஷ் சொல்லும் அவற்றின் மறு பக்கங்கள் பகீரென்று இருக்கின்றன. டிராபிக்கில் சிக்னல் மீறி, கப்பம் கட்ட மறுத்து 15 நாள் ரிமாண்டில் உள்ளே வந்து வாழ்க்கையே மாறிப்போனவன் கதையெல்லாம் படிக்கும்போது போலீஸைப் பார்த்தாலே வணக்கம் சொல்லி விட்டுப் பேசாமல் ஒதுங்கிப் போகத்தான் தோன்றுகிறது.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியே ஆக வேண்டும். தமிழ்ப் படத்தின் அபத்தக் களஞ்சியங்கள் அதன் ஹீரோக்களின் திருவிளையாடல்கள். நமது விசிலடிச்சான் குஞ்சுகள் சீனுக்கு சீன் விசிலடித்துப் பார்க்க உதவும் ஓட்டை லாஜிக் விஷயங்கள் நிறைய. திரைப் படங்களில் போலீஸுக்கு முன்னால் எதிரே தைரியமாக நின்று தூசு பறக்க தொடை தட்டி வசனம் பேசும் ஓமக்குச்சி ஹீரோவைப்பார்த்து விட்டுப் போய் போலீஸிடம் உங்கள் வாலை, இல்லையில்லை, அட் லீஸ்ட் வாயைக் காட்டிவிடாதீர்கள். அப்படி எல்லாம் செய்து விட்டு, படம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கும் ஹீரோ போல் செய்ய முயற்சித்தால் முடிந்தது. சிம்பிளாக ஒரே ஒரு கஞ்சா கேஸ். தூக்கி உள்ளே வைத்து விடுவார்கள். முடித்து வெளிவருவதற்குள் உங்கள் வாழ்க்கையே மாறியிருக்கும்.

உங்களில் பலருக்கும் தெரிந்திருக்கும். வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை (உண்மையில் அது, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை, திருடனின் போக்கு கற்றவனுக்கு போலீஸ் வேலை) என்ற சொலவடை இன்னும் புழங்கி வருகிறது. ஊரில் சண்டித்தனம் செய்து சுற்றித் திரியும் இளவட்டங்கள் எல்லாம் கான்ஸ்டபிள் வேலைக்கும் பி.சி. வேலைக்கும் இன்டர்வியூவுக்கு அனுப்பப்படுகிறார்கள். ‘அஞ்சாதே’ மீண்டும் உதாரணத்துக்கு. அவர்கள் எதிர்கொள்ளும் ஆரம்பகால விஷயங்கள் அவர்களது போலீஸ் கேரியரை பில்ட் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியாக ஷேப் செய்யப்படாத கேரியர் கொண்ட சிலரிடம் மாட்டிக்கொள்வது நம் போன்ற பொதுஜனம்தான்.

பெருமாள் சாமியை தமிழில் "பெருமல் சமி" என்று பேங்க் சலானில் இட்டு நிரப்புகிறார் இருபத்தைந்து வருடம் சர்வீஸ் போட்ட ஒரு போலீஸ்காரர் என்று புலம்புகிறார் ஒரு வாரமலர் வாசகர். தான் ஒரு சிறு ஆக்ஸிடென்ட் கேஸுக்காக அலையும் போது அந்த ஏரியாவில் எந்த போலீஸ் ஸ்டேஷனிலும் இன்னும் கம்ப்யூட்டர் எட்டிப்பார்க்கவில்லை என்று ‘விகட’னில் தொடர் எழுதுகிறார் அன்டன் பிரகாஷ் என்ற ஒரு கட்டுரையாளர். இரயில்வே ஸ்டேஷனில் பிச்சைக்காரர் பையில் இருந்து காசு எடுத்து ரயில்வே ஊழியர்களிடம் அடிவாங்கிய போலீஸ்காரர் கதையைச் சொல்லிச் சொல்லி சிரிக்கிறது ஒரு தினசரி நாளிதழ். லேப்டாப், ஐபாட் என்றால் என்ன என்று கேட்கும் நிலைமையில் தான் போலீஸ்காரர்களின் டெக்னிகல் அறிவு இருக்கிறது என்று புள்ளி விவரம் காண்பிக்கிறது ஒரு இணைய இதழ்.

எத்தனை திரைப் படங்கள் எடுத்தாலும், எத்தனை மனித உரிமை மீறல் கேஸ்கள் போட்டாலும், என்கவுன்டரும், கஞ்சா கேஸும் போட்டு உள்ளே அனுப்பி கணக்கை முடிக்கும் மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் சிரிப்பு போலீஸாய் வடிவேலுகளும், விவேக்குகளும் வேஷம் போட்டுக் கலாய்க்கும் நிலையில்தான் இன்றைய கடைநிலை போலீஸும் இருக்கிறது. காவல்துறை உங்கள் நண்பன் என்று ஃபிளக்ஸ் போர்டு போட்டு வரவேற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் சாதாரண பாமர ஜனங்கள் ஐயா என்று கூப்பிட வேண்டும், சார் என்று கூப்பிடக் கூடாது என்பதெல்லாம் கண்டிஷன்கள் - அவர்களுக்குள் மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் கூட.

அரசியல் கட்சி ஸ்பெஷல் மீட்டிங் போட்ட இடத்தில் மசால் பஜ்ஜிக்கு பையில் இருந்து சில்லறை கொடுத்துவிட்டுப் புலம்பியபடியே ஸ்பெஷல் டூட்டி பார்க்கும் அப்பாவி போலீஸ்களும், பழைய பெரிய சைஸ் கேரியர் வைத்த சைக்கிளில் நீளமான மூங்கில் குச்சியைக் குத்தி வைத்து ரோந்து போகும் போலீஸ்களும், கேஸ் கொடுத்து விட்டு சோகமாய்ச் செல்லும் பெண்மணியிடம் ஆறுதலாய்ச் சில வார்த்தைகள் பேசி அனுப்பும் போலீஸ்களும், ஸ்பெஷல் டூட்டியைக் கோவில் டூட்டியாயக் கேட்டு வாங்கி கோயிலைச் சுற்றிச் சுற்றி வரும் போலீஸ்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆனால் எனக்கு இன்னும் பயம் போகவில்லை.

-------
-----------------------------------------------------

படிச்சாச்சா.........?

அப்புறம்... இன்ட்லி லோகோ இருக்கா பக்கத்துல....?

தமிழ்மணம் லோகோ இருக்கா மேல....?

புடிச்சிருந்தா ஓட்டுப்போடுங்க...

புடிக்கலன்னாலும் ஓட்டுப்போடுங்க...
--------------------------------------

2 கருத்துகள்:

  1. Very Good Yeska. I like your way of writing. Keep it up.

    Vijay (United States)

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கு நன்றி விஜய்.. எல்லாம் சொந்தக்கதையோடு சேர்ந்த சோகக்கதைதான். உங்க ஊரில் இந்த மாதிரி அனுபவம் எல்லாம் உண்டா???

    பதிலளிநீக்கு